
ஆசிய கிரிக்கெட் கவுன்சின் யு19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொட்ரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அதன்படி அணியின் நடத்திர வீரர்கள் உஸ்மான் கான் மற்றும் ஷசீப் கான் உள்ளிட்டோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஃபர்ஹான் யுசுஃப் 32 ரன்களையும், முகமது ரியாஸுல்லா 28 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதனால் பாகிஸ்தான் அணி 37 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களை மட்டுமே சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இக்பால் ஹொசைன் எமோன் 4 விக்கெட்டுகளையும், மருஃப் ம்ரிதா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.