
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 07ஆம் தேதி டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாளில் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக முதல் நாள் ஆட்டமானது கைவிடப்பட்டது.
இதனையடுத்து நேற்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் அணியின் தொடக்க வீரர் டோனி டி ஸோர்ஸி ஒருப்பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 20 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த கேப்டன் டெம்பா பவுமா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்திருந்த டோனி டி ஸோர்ஸி சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 78 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து அணியின் கேப்டன் டெம்பா பவுமா தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அவருடன் விளையாடிய டேவிட் பெடிங்ஹாம் 29 ரன்களுக்கும், ரியான் ரிக்கெல்டன் 19 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்த நிலையில், சதத்தை நெருங்கிய டெம்பா பவுமா 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 86 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து கைல் வெர்ரையன் 29 ரன்களுக்கும், கேசவ் மகாராஜ் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த வியான் முல்டர் - காகிசோ ரபாடா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.