பிபிஎல் 2023: கிறிஸ் லின் அதிரடி; அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அபார வெற்றி!
மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிபிஎல் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 36ஆவது லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ரெனிகேட்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு மேத்யூ ஷார்ட் - ரியான் கிப்சன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் கிப்சன் 24 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய மேத்யூ ஷார்ட்டும் 38 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
Trending
பின்னர் களமிறங்கிய கிறிஸ் லின் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியதுடன், அரைசதத்தையும் பதிவுசெய்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய லின் 37 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரிகள் என 69 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதன்பின் ஆடம் ஹோஸ் 33, காலின் டி கிராண்ட்ஹோம் 32 ரன்களைச் சேர்த்து உதவினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மெல்போர்ன் ரினிகேட்ஸ் அணிக்கு மார்ட்டின் கப்தில் - மார்கஸ் ஹாரிஸ் இணை களமிறங்கினர்.
இதில் கப்தில் 14 ரன்களில் ஆட்டமிழக்க, மார்கஸ் ஹாரிஸ் 8 ரன்களிலும், அடுத்து வந்த ஆரோன் ஃபிஞ்ச் 2 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திருபினர். பின்னர் சாம் ஹார்ப்பர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்துஅசத்தினார். அதன்பின் சாம் ஹார்ப்பர் 36 பந்துகளில் 4 சிக்சர், 3 பவுண்டரி என 63 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த ஜோனதன் வெல்ஸ் 26, மேத்யூ 33, வில் சதர்லேண்ட் 31 ரன்கள் என சேர்த்த நிலையிலும் 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை மட்டுமே எடுத்தது. ஸ்டிரைக்கர்ஸ் அணி தரப்பில் மேத்யூ ஷார்ட், வெச் அகர், பென் மனெட்டி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன்மூலம் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது. இப்போட்டியின் வெற்றிக்கு உதவிய கிறிஸ் லின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
Win Big, Make Your Cricket Tales Now