BBL 12: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி பெர்த் ஸ்காச்சர்ஸ் அபார வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பேஷ் லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 12ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற் பெர்த் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய பெர்த் அணியின் தொடக்க வீரர் ஆடம் லித் 7 ரன்களோடு நடையைக் கட்ட, மற்றொரு தொடக்க வீரரான ஃபாஃப் டூ பிளெசிஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு துணையாக நிக் ஹாப்சனும் அதிரடியில் மிரட்ட அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.
Trending
தொடர்ந்து அபாரமாக விளையாடிய டூ பிளெசிஸ் பவுண்டரியும் சிக்சர்களுமாக பறக்கவிட்டு 25 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதன்பின் 33 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரிகள் என 68 ரன்களைச் சேர்த்திருந்த டூ பிளெசிஸ் ஆட்டமிழந்தார். பின்னர் அரைசதம் கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹாப்சன் 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஆஷ்டன் டர்னரும் ஒரு ரன்னுடன் வெளியேறினார். பின்னர் அதிரடி காட்டத்தொடங்கிய ஜோஷ் இங்கிலிஸும் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் 200 ரன்களைத் தாண்டியது. தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த இங்லிஸ் 33 பந்துகளில் 6 சிக்சர், 5 பவுண்டரிகள் என 74 ரன்களைச் சேர்த்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
அதற்கடுத்த பந்திலேயே 30 ரன்களைச் சேர்த்திருந்த ஆரோன் ஹார்டியும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து வந்த ஜெய் ரிச்சர்ட்சனும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களைக் குவித்தது. மெல்போர்ன் அணி தரப்பில் லுக் வுட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் தாமஸ் ரோஜர்ஸ் 9 ரன்களிலும், ஜோ கிளார்க் 18 ரன்களிலும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த வெப்ஸ்டர் - லார்கின் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இவர்களது அதிரடியும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இதில் வெப்ஸ்டர் 43 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட, நிக் லார்கினும் 34 ரன்களோடு நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வந்த வேகத்திலேயே விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை மட்டுமே எடுத்தது. பெர்த் அணி தரப்பில் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now