
பிக் பேஷ் லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ரெனிகேட்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய பெர்த் அணிக்கு ஸ்டீவி எஸ்கினாசி - பான்கிராஃப்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அசத்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். அதன்பின் எஸ்கினாசி 54 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்லிஸ், ஆஷ்டன் டர்னர், நிக் ஹாப்சன் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிவந்த பான்கிராஃப் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பான்கிராஃப்டால் 50 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 95 ரன்களை மட்டுமே எடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களைச் சேர்த்தது.