பிபிஎல் 12 குவாலிஃபையர்: டர்னர் அதிரடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
சிட்னி சிக்சர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான பிக் பேஷ் லீக்கின் 12ஆவது சீசன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஜோஷ் பீலிப், குர்டின் பேட்டர்சென் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, நம்பிக்கை நட்சத்திரமான ஸ்டீவ் ஸ்மித்தும் 18 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹென்றிக்ஸ் - சில்க் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Trending
இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஹென்றிக்ஸ் அரைசதம் கடந்த கையோடு 58 ரன்களில் விக்கெட்டை இழக்க, சில்க் 47 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் கடக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதனைத்தொடர்ந்து வந்த வீரர்களும் சொதப்பியதால், 20 ஓவர்கள் முடிவில் சிட்னி சிக்சர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பெர்த் ஸ்காச்சர்ஸ் அணியிலும் ஸ்டீஃபன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்லிஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த காமரூன் பான்கிராஃப் - ஆஷ்டன் டர்னர் ஆகியோர் அதிரடியான அட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மளமளவென உயர்தினர்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பான்கிராஃப் 45 பந்துகளில் 53 ரன்களையும், கேப்டன் ஆஷ்டன் டர்னர் 47 பந்துகளில் 9 பவுண்ட்ரி, ஒரு சிக்சர் உள்பட 84 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதன்மூலம் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், முதல் அணியாக இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now