பிபிஎல் 13: ஷான் மார்ஷ் அரைசதம்; ஸ்டார்ஸை வீழ்த்தி ரெனிகேட்ஸ் அசத்தல் வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 36ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு தாமஸ் ரோஜர்ஸ் - டேனியல் லாரன்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் டேனியல் லாரன்ஸ் 8 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 23 ரன்களைச் சேர்த்திருந்த தாமஸ் ரோஜர்ஸும் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த வெப்ஸ்டர் - கேப்டன் மேக்ஸ்வெல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் 20 ரன்களுக்கு மேக்ஸ்வெல் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் ரன்கள் ஏதுமின்றி பெவிலியனுக்கு திரும்பினார்.
Trending
இவர்களைத் தொடர்ந்து வெப்ஸ்டர் 29 ரன்களுக்கும், கார்ட்ரைட் 39 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி தரப்பில் அகீல் ஹொசைன், கேன் ரிச்சர்ட்சன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு ஷான் மார்ஷ் - ஆரோன் ஃபிஞ்ச் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தனது கடைசி போட்டியில் விளையாடிய ஆரோன் ஃபிஞ்ச் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுபக்கம் ஷான் மார்ஷ் அதிரடியாக விளையாட, அவருடன் இணைந்த ஜேக் ஃபிரசெரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.
இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷான் மார்ஷ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜேக் 42 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய ஜோர்டன் காக்ஸ் 4 ரன்களுக்கும், வில் சதர்லேண்ட் 10 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷான் மார்ஷ் 64 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி வெற்றிபெற காரணமாக இருந்த ஷான் மார்ஷ் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.
Win Big, Make Your Cricket Tales Now