
பிக் பேஷ் லீக் தொடரின்13ஆவது வீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி நடத்தின. பிரிஸ்பேனிலுள்ள கப்பா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் கேப்டன் காலின் முன்ரே ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஜோஷ் பிரௌன் - மெக்ஸ்வீனி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின் ஜோஷ் பிரௌன் 39 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதன்பின் களமிறங்கிய ரென்ஷா 17 ரன்களுக்கும், சாம் பில்லிங்ஸ் 23 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த மெக்ஸ்வீனி 73 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, பிரிஸ்பேன் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிட்னி அணி தரப்பில் டேனியல் சாம்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.