
பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 32ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு உஸ்மான் கவாஜா - காலின் முரோ இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் காலின் முன்ரோ 2 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 14 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் உஸ்மான் கவாஜாவும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த மார்னஸ் லபுஷாக்னே - சாம் பில்லிங்ஸ் இணையும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
பின் இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்னஸ் லபுஷாக்னே 45 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து சாம் பில்லிங்ஸும் 37 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய மைக்கேல் நேசர் யாரும் எதிர்பாராத வகையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 64 ரன்களைக் குவித்தார்.