
பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு கேப்டன் மேத்யூ ஷார்ட் - டி ஆர்சி ஷார்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டி ஆர்சி ஷார்ட் 6 ரன்களில் ஆட்டமிழக்க, மேத்யூ ஷார்ட் 13 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வெதர்லெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் களமிறங்கிய தாமஸ் கெல்லி 6 ரன்களுடனும், ஹாரி நெய்ல்சன் ஒரு ரன்னுடனும் என ஆட்டமிழந்தனர்.
இதற்கிடையில் அரைசதம் கடந்திருந்த வெதர்லெட் 56 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த பென் மனெட்டி 23, தொர்ண்டன் 28 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்தது. பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி தரப்பில் கேப்டன் ஹாரோன் ஹார்டி மற்றும் கூப்பர் கனொலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.