பிபிஎல் 13: மெல்போர்ன் ஸ்டார்ஸை பந்தாடியது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெர்த் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய மெல்போர்ன் அணி வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அந்த அணியின் தொடக்க வீரர்கள் சாம் ஹார்பர் ஒரு ரன்னிலும், வெப்ஸ்டர் 4 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த தாமஸ் ரோஜர்ஸ் - கேப்டன் மார்கஸ் ஸ்டொய்னிஸ் இணை தாக்குப்பிடித்து விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோஜர்ஸ் 23 ரன்களிலும், ஸ்டொய்னிஸ் 13 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
Trending
அதன்பின் கேட்ரைட் 24, லியாம் டௌசன் 22 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் 19.1 ஓவர்களிலேயே மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களுக்கு ஆல அவுட்டானது. பெர்த் அணி தரப்பில் ஜேசன் பெஹ்ரண்டார்ஃப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பெர்த் அணிக்கு ஸ்டீபன் எஸ்கினாசி - கூப்பர் கொன்னலி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் எஸ்கினாசி 25 ரன்களிலும், கூப்பர் 20 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஆரோன் ஹார்டியும் 20 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
பின்னர் களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் - ஆஷ்டன் டர்னர் இணை இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். இதன்மூலம் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 13.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now