-mdl.jpg)
பிக் பேஷ் லீக் டி20 தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 30 ஆவது லீக் போட்டியில் சிட்னி தண்டர் மற்றும் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெர்த் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சிட்னி அணிக்கு பான்கிராஃப்ட் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தன்ர். இதில் பான்கிராஃப் 12 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கொஹ்லர் காட்மோரும் ஒரு பவுண்டரி, 2 சிக்சர்கள் என 27 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் மேத்யூ கில்க்ஸ், ஒலிவியர் டேவிஸ், ரோஸ், டேனியல் சாம்ஸ், மெக்கண்ட்ரூ ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அதேசமயம் மறுபக்கம் அதிரடியில் மிரட்டிய அலெக்ஸ் ஹேல்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 4 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 72 ரன்களில் அலெக்ஸ் ஹேல்ஸும் விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சிட்னி தண்டர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களைச் சேர்த்தது. பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி தரப்பில் கூப்பர் கன்னொலி 3 விக்கெட்டுகளையும், ஆஷ்டன் ஆகார் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.