
ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை ஏட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற குவாலிஃபையர் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. குயீன்ஸ்லாந்தில் நடைபெற்ற இப்போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணியில் ஜேக் எட்வர்ஸ் 16 ரன்களிலும், ஜோஷ் பிலீப் 5 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த டேனிய ஹூக்ஸ் - கேப்டன் ஹென்றிக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் 3ஆவது விக்கெட்டிற்கு 90 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேனியல் ஹூக்ஸ் 42 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்த ஹென்றிக்ஸும் 59 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப, 20 ஓவர்கள் முடிவில் சிட்னி சிக்சர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களைச் சேர்த்தது.