பிபிஎல் 2024-25: டெக்கெட், ஸ்டொய்னிஸ் அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 23ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மெல்ப்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு ஜோஷ் பிரௌன் மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜோஷ் பிரௌன் 6 ரன்னிலும், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 12 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டிம் செய்ஃபெர்டும் 17 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதனால் அந்த அணி 53 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த ஜேக்கப் பெத்தெல் மற்றும் ஜோனதன் வெல்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Trending
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இணிந்து 4ஆவது விக்கெட்டிற்கு 70 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜேக்கப் பெத்தெல் 49 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 45 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிடடார். இறுதியில் லௌரி எவான்ஸ் 24 ரன்களைச் சேர்க்க, மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 168 ரன்களை சேர்த்தது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தரப்பில் ஜோயல் பேரிஸ், பீட்டர் சிடில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் ஒருபக்கம் அதிரடியாக விளையாடிய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய தாமஸ் ரோஜர்ஸ் ஒரு ரன்னிலும், சாம் ஹார்பர் ஒரு ரன்னிலும், டேனியல் லாரன்ஸ் 2 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் பென் டக்கெட்டுடன் இணைந்த மார்கஸ் ஸ்டொய்னிஸும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் பென் டக்கெட் அரைசதம் கடந்து அசத்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 67 ரன்களைச் சேர்த்த நிலையில் பென் டக்கெட் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஸ்டொய்னிஸும் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 48 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் கிளென் மேக்ஸ்வெல் 20 ரன்களையும், ஹில்டன் கார்ட்ரைட் 24 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now