
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நாதன் எல்லிஸ் தலைமையிலான ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியும் டேவிட் வார்னர் தலைமையிலான சிட்னி தண்டர் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஹொபர்டில் உள்ள பெல்லரிவ் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹரிகேன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய சிட்னி தண்டர் அணிக்கு ஜேசன் சங்கா மற்றும் கேப்டன் டேவிட் வார்னர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து ஆரம்பம் முதலே பவுண்டரிகளையும், சிக்ஸர்களுமாக விளாசி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் அபாரமாக விளையாடிய ஜேசன் சங்கா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் கேப்டன் டேவிட் வார்னர் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 48 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மேத்யூ கில்க்ஸ் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சாம் பில்லிங்ஸூம் 20 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். பின்னர் தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜேசன் சங்கா 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 67 ரன்களைச் சேர்த்து கையோடு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஒலிவியர் டேவிஸ் 26 ரன்களையும், கிறிஸ் கிரீன் 16 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் சிட்னி தண்டர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது.