
பிக் பேஷ் லீக் டி20 தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 31ஆவது லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீச முடிவுசெய்து அடிலெய்ட் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய அடிலெய்ட் அணிக்கு கேப்டன் மேத்யூ ஷார்ட் மற்றும் கிறிஸ் லின் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அரம்பம் முதலே பவுண்டரிகளாக விளாசித்தள்ள அணியின் ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் உயரத்தொடங்கியது. இதில் அபாரமாக விளையாடிய மேத்யூ ஷார்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் முதல் விக்கெட்டிற்கு 121 ரன்களை எட்டியது. அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் லின் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 47 ரன்களை எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அலெக்ஸ் கேரி 13 ரன்களுக்கும், ஒல்லி போப் 6 ரன்களுக்கு என நடையைக் கட்ட, தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மேத்யூ ஷார்ட் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 10 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 109 ரன்களை எடுத்திருந்த கையோடு மேத்யூ ஷார்ட் ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த அலெக்ஸ் ரோஸ் 19 பந்துகளில் 44 ரன்களைச் சேர்த்து அணியை வலிமையான நிலையை நோக்கி அழைத்துச் சென்றார். இதன்மூலம் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ரன்களைக் குவித்தது.