
14ஆவது சீசன் பிக் பேஷ் லீக் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு ஆரோன் ஹார்டி மற்றும் ஃபின் ஆலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அதிரடியாக தொடங்கிய நிலையில், ஃபின் ஆலன் 19 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னார் களமிறங்கிய கூப்பர் கன்னொலி ரன்கள் ஏதுமின்றியும் மற்றும் கேப்டன் ஆஷடன் டர்னர் 8 ரன்களிலும், நிக் ஹாப்சன் 12 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதையடுத்து மற்றொரு தொடக்க வீரரான ஆரோன் ஹார்டி 34 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் வந்த ஆஷ்டன் அதிரடியாக விளையாடி அணியின் கோரை உயர்த்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 51 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களைச் சேர்த்தது. மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி தரப்பில் ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுகளையும், டாம் ரோஜர்ஸ், வில் சதர்லெட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.