
பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பிரிஸ்பேன் ஹீட் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு டாம் பாண்டன் மற்றும் கேப்டன் காலின் முன்ரோ இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கேப்டன் முன்ரோ ஒரு ரன்னில் நடையைக் கட்ட, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான டாம் பான்டனும் 10 ரன்களில் நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய நாதன் மெக்ஸ்வீனி மற்றும் மேத்யூச் ரென்ஷா இணை தலா 9 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் பிரிஸ்பேன் ஹீட் அணி 39 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. அதன்பின் களமிறங்கிய மேக்ஸ் பிரைண்ட் அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டார்.
தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ் பிரைண்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், மறுமுனையில் விளையாடி வந்த பால் வால்டர் 21 ரன்களிலும், வில் பிரிஸ்ட்விட்ஜ் 4 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மேக்ஸ் பிரைண்ட் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 77 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களைச் சேர்த்தது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தரப்பில் மார்க் ஸ்டெகெடீ 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.