
பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 14ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ரெனிகேட்ஸ் அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் - ஜோஷ் பிரௌன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அதிரடியாக தொடங்கிய நிலையில் மெக்குர்க் 21 ரன்னிலும், ஜோஷ் பிரௌன் 22 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய டிம் செய்ஃபெர்ட் ஒருபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுமுனையில் விளையாடிய மெக்கன்சி ஹார்வி 11 ரன்னிலும், லௌரி எவான்ஸ் ஒரு ரன்னிலும், ஹசன் கான் 6 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் டிம் செய்ஃபெர்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
அதேசமயம் டிம் செஃபெர்ட்டுடன் இணைந்த கேப்டன் சதர்லேண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், 6ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் செஃபெர்ட் 55 ரன்னில் விக்கெட்டை இழந்த நிலையில், மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சதர்லேண்ட் 36 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்களைச் சேர்த்தது. சிட்னி அணி தரப்பில் பென் துவர்ஷுயிஸ, சீன் அபோட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.