
பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 35ஆவது லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய அடிலெய்ட் அணியில் கேப்டன் மேத்யூ ஷார்ட் 4 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அவரைத்தொடர்ந்து டி ஆர்சி ஷார்ட் 10 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 18 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஒல்லி போப் - அலெக்ஸ் ரோஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும பறக்கவிட்டு அணியை சரிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் ஒல்லி போப் தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார்.
அதன்பின் 57 ரன்களைச் சேர்த்த நிலையில் ஒல்லி போப் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதத்தை நெருங்கிய அலெக்ஸ் ரோஸும் 48 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். இறுதியில் ஜேமி ஓவர்டன் அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் 34 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைச் சேர்த்தது. சிட்னி சிக்ஸர்ஸ் அணி தரப்பில் ஜேக் எட்வர்ட்ஸ் மற்றும் டாட் மர்ஃபி மற்றும் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.