
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 14ஆவது சீசன் பிக் பேஷ் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பிரிஸ்பேனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பிரிஸ்பேன் அணிக்கு டாம் பான்டன் - டிம் பெர்சன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டாம் பான்டன் 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் காலின் முன்ரோ 9 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான டிம் பெர்சனும் 24 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய நாதன் மெக்ஸ்வீனி ஒருபக்கம் பொறுப்புடன் விளையாட, மறுமுனையில் விளையாடிய மேத்யூ ரென்ஷா ஒரு ரன்னிலும், மேக்ஸ் பிரைண்ட் 2 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனையடுத்து நிதானமாக விளையாடி வந்த மெக்ஸ்வீனியும் 34 ரன்களில் பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய வீரர்களில் பால் வால்டர் 22 ரன்களையும், ஸ்வெப்சன் மற்றும் ஸேவியர் பார்ட்லெட் ஆகியோர் தலா 11 ரன்களையும் சேர்த்தனர். இதனால் பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களைச் சேர்த்தது. சிட்னி அணி தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 4 விக்கெட்டுகளையும், ஹெய்டன் கெர் மற்றும் டாட் மர்ஃபி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.