
மகளிர் அண்டர்19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய மகளி யு19 மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் யு19 அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோலா லம்பூரில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க யு19 மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய யு19 மகளிர் அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் அதிகபட்சமாக மீகே வான் வூரஸ்ட் 23 ரன்களையும், ஜெம்மா போத்தா 16 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க யு19 அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் கங்கோடி த்ரிஷா 3 விக்கெட்டுகளையும், பருனிகா சிசோடி, ஆயூஷி ஷகில் மற்றும் வைஷ்னவி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய யு19 அணியில் ஜி கமலினி 8 ரன்களில் ஆட்டமிழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கங்கோடி த்ரிஷா 8 பவுண்டரிகளுடன் 44 ரன்களையும், சனிகா சால்கே 4 பவுண்டரிகளுடன் 26 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.