
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து தலைவர் இல்லாமலேயே தேர்வு குழு செயல்பட்டது. மேலும் ஆஸ்திரேலியா தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என முக்கிய தொடரில் தேர்வு குழு தலைவர் இல்லாமல் தான் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது.
தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தோல்வியை தழுவியது அடுத்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் ஆசிய கோப்பை உலகக் கோப்பை கிரிக்கெட் என அடுத்தடுத்து முக்கிய தொடர்கள் நடைபெறுகிறது. இதனால் புதிய தேர்வு குழு தலைவரை தேர்வு செய்யும் கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் பிசிசிஐ தற்போது தேர்வு குழு உறுப்பினருக்கான விண்ணப்பத்தைக் கோரி விளம்பரம் ஒன்று வெளியிட்டுள்ளது. பதவிக்கு வரும் நபர்கள் குறைந்தபட்சம் சர்வதேச அளவில் ஏழு டெஸ்ட் போட்டிகளாவது விளையாடிருக்க வேண்டும் அல்லது முதல் தர போட்டிகளில் 30 போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் அல்லது 10 சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் 20 டி20 போட்டிகள் விளையாடி இருக்க வேண்டும் என்று பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.