
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக இத்தொடரில் எஞ்சியிருந்த போட்டிகளை ஒருவாரம் ஒத்திவைப்பதாக பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பானது நேற்று வெளியானது.
முன்னதாக பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதலில் 25 இந்தியர்கள் மற்றும் ஒரு நேபாள நாட்டவர் உட்பட 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பு மீது இந்திய இராணுவம் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியது. அதன் ஒருபகுதியாக எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.
இதனால் மே 08ஆம் தேதி தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், முதல் இன்னிங்ஸில் 10.1 ஓவர்களள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் எதிரொளியாகவே இப்போட்டியானது பாதியில் கைவிடப்பட்டது என்ற தகவலும் வெளியாகி இருந்தது.