
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. கடந்த 2007 டி20 உலகக்கோப்பை, 2011 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் கோப்பை, டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 என்று தோனி தலைமையில் இந்திய அணி பல்வேறு சாதனைகளையும், மகுடங்களையும் வென்றது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் நிரந்தர வீரராக இருந்தவர் தோனி.
ஒருநாள் கிரிக்கெட்டில் 350 போட்டிகள் விளையாடி 10,773 ரன்களையும், 90 டெஸ்ட் போட்டிகளில் 4,876 ரன்களையும், 98 டி20 போட்டிகளில் 1,617 ரன்களையும் விளாசியுள்ளார். இந்திய அணியின் கேப்டன்சி பொறுப்பு மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் இரு தரப்பையும் தோனி ஒற்றை ஆளாக கையாண்டது இன்று வரை ஆச்சரியம் தான்.
இதன் காரணமாகவே தோனி இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்களை அணிக்குள் நிரந்தர வீரராக மாற்றியதிலும் தோனியின் பங்கு உள்ளது. அதேபோல் சரியான நேரத்தில் கேப்டன் பதவியை ராஜினாமா செய்து சாதாரண வீரராக விளையாடிய பெருமை தோனிக்கு மட்டுமே உள்ளது.