
இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது ஆகஸ்ட் 04ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதில் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில்லும், துணைக்கேப்டனாக ரிஷப் பந்த்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு அறிமுக வீரர்கள் சாய் சுதர்ஷன், அர்ஷ்தீப் சிங் ஆகியோருடன் கருண் நாயர், குல்தீப் யாதவ் மற்றும் ஷர்தூல் தாக்கூர் ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு கிடைத்துத்துள்ளது. இருப்பினும் முகமது ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், சர்ஃப்ராஸ் கான், அக்ஸர் படேல் ஆகியோருக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இப்போட்டிக்காக இந்திய அணி தயார்படுத்தப்பட்டு வருகிறது. முன்னதாக கடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியைச் சந்தித்ததை அடுத்து அணியின் துணை பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப் ஆகியோர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர். மேலும் இவர்களுக்கான மாற்று பயிற்சியாளர்களையும் பிசிசிஐ அறிவிக்காமல் இருந்தது.