
இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா பங்குபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி மொகாலியில் நடைபெற உள்ள நிலையில் 2ஆவது போட்டி பெங்களூருவில் பகலிரவு போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் நடைபெற உள்ளது.
இந்த டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் முக்கிய அம்சமாக சமீபத்தில் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலிக்கு பதில் புதிய டெஸ்ட் கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா செயல்பட சமீப காலங்களாக சதம் அடிக்க முடியாமல் மோசமான பார்மில் திண்டாடி வந்த புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் அந்த அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் இந்திய அணியில் நீண்ட காலமாக விளையாடி வந்த அனுபவ விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா மற்றும் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோரும் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார்கள். சமீப காலங்களாக நல்ல பார்மில் இல்லாத காரணத்தாலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்து விட்டதாலும் இவர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.