
வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் தயாராகி வரும் உலகின் அனைத்து முன்னணி அணிகளும் தங்களது 15 பேர் கொண்ட அணியை வெளியிட்டுள்ளன. அந்த வகையில் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் விராட் கோலி தலைமையில் பாகிஸ்தானிடம் லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது.
அவருக்கு உறுதுணையாக ஜாம்பவான் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட நிலையில் அவர்களது கூட்டணியில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு டி20 தொடர்களிலும் சக்கை போடு போட்டு வென்ற இந்தியா உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறியுள்ளது. அதனால் இம்முறை உலகக் கோப்பை நமதே என்று மகிழ்ச்சியடைந்த ரசிகர்களுக்கு மினி உலகக் கோப்பையை போல் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் அழுத்தமான சூப்பர் 4 சுற்றில் மண்ணை கவ்விய இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெறாமல் இலங்கை, பாகிஸ்தான் போன்ற அணிகளிடம் தோற்று வெளியேறியது கவலையாக மாறியுள்ளது.
அத்துடன் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பினாலும் கேப்டன் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், புவனேஸ்வர் குமார், ரிஷப் பண்ட் போன்ற உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள முக்கிய வீரர்களின் தற்போதைய பார்ம் கவலைக்குரியதாக உள்ளது. அத்துடன் காயத்தால் விலகிய ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் உலகக் கோப்பை அணிக்கு திரும்பியது பலமாக பார்க்கப்பட்டாலும் நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறியது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.