
லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பில் சால்ட், ஜேமி ஸ்மித அகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த பென் டக்கெட் - ஜோ ரூட் இணை பொறுப்புடன் விளையாடி மூன்றாவது விக்கெட்டிற்கு 158 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் அரைசதம் கடந்திருந்த ஜோ ருட் 68 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபாரமாக விளையாடிய பென் டக்கெட் சதமடித்து அசத்தினார்.
இப்போட்டியில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த பென் டக்கெட் 143 பந்துகளில் 17 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 165 ரன்களைக் குவித்து விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மற்ற வீரர்களில் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்காததால் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.