பென் டக்கெட் முழு உடற்தகுதியுடன் உள்ளார் - இசிபி!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது காயமடைந்த இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் முழு உடற்தகுதியை எட்டியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
முன்னதாக இத்தொடருக்கும் தயாராகும் வகையில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது 3-0 என்ற கணக்கில் இந்தியாவிடம் படுதோல்வியை தழுவியதுடன் ஒயிட்வாஷும் ஆனது.
Trending
இதனால் இங்கிலாந்து அணி எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் எவ்வாறு செயல்படும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பென் டக்கெட் ஃபீல்டிங்க் போது காயமடைந்தார். அதன்பின் களத்தை விட்டு வெளியேறிய அவர், பிறகு பேட்டிங்கின் போது அசௌகரியமாக காணபட்டார்.
இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அவரால் பங்கேற்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது. இதனையடுத்து துபாய் சென்ற டக்கெட்டிற்கு ஸ்கோன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவில் பென் டக்கெட் தனது காயத்தில் இருந்து மீண்டு முழு உடற்தகுதியை எட்டியுள்ளதாகவும், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவார் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இருப்பினும் அணியின் நட்சத்திர வீரர்களான ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜேமி ஸ்மித் உள்ளிட்டோருக்கு காயம் குறித்த அறிகுறிகள் இருப்பதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பிராண்டன் மெக்கல்லம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து ஜேக்கப் பெத்தல் விலகியதை அடுத்து அவருக்கு பதில் டாம் பான்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இதையடுத்து எதிவரும் பிப்ரவரி 18ஆம் தேதி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்றடையும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து அணி பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் தங்களுடைய முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now