
இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஜோ ரூட் சமீபத்தில் விலகினார். இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது. இந்தத் தோல்வி இங்கிலாந்துக்கும் ஜோ ரூட்டுக்கும் பெரிய சிக்கலாக அமைந்தது.
கடந்த 5 டெஸ்ட் தொடர்களில் 4-ல் தோற்ற இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-2 எனப் பின்தங்கியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் இங்கிலாந்து கடைசி இடத்தில் அதாவது 9-ம் இடத்தில் உள்ளது. விளையாடிய 11 டெஸ்டுகளில் ஒரு டெஸ்டில் மட்டும் வெற்றி பெற்று 7 டெஸ்டுகளில் தோற்றுள்ளது.
இதன் காரணமாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் பதவியைப் பறிக்க வேண்டும், இங்கிலாந்து அணிக்குப் புதிய கேப்டனை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்தன. ஆனாலும் தொடர்ந்து கேப்டனாக இருக்க ரூட் விருப்பம் தெரிவித்தார். கடைசியில் வேறுவழியின்றி ராஜிநாமா செய்துவிட்டார்.