
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையை வென்ற ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து மீண்டும் நடைபெற்ற ஒருநாள் தொடரை இழந்தாலும் வெற்றிக் கோப்பையுடன் மகிழ்ச்சியாக நாடு திரும்பியது. அதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் துவங்குகிறது.
சொல்லப்போனால் 2010 வாக்கில் இலங்கை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் கடந்த 17 வருடங்களாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல் இருந்த இங்கிலாந்து ஒரு வழியாக இந்த உலகக் கோப்பைக்கு முன்பாக பயணித்து 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வெற்றியும் கண்டது. அதன் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த தொடரால் 17 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் முதல் முறையாக இங்கிலாந்து ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் களமிறங்குவது அனைவரது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொடரில் பங்கேற்பதற்காக பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இன்று தங்களது நாட்டுக்கு வந்த இங்கிலாந்து வீரர்களுக்கு பாகிஸ்தான் வாரியம் சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. சமீப காலங்களில் ரொம்பவே தடுமாறிய இங்கிலாந்து புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் – பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது வருகைக்கு பின் நியூசிலாந்து, இந்தியா போன்ற அணிகளை சொந்த மண்ணில் அடித்து நொறுக்கி தோற்கடித்து உலக அளவில் பாராட்டுகளை பெற்றது.