
India vs England 3rd Test: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயத்தைச் சந்தித்துள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் பென் டக்கெட் 23 ரன்னிலும், ஸாக் கிரௌலி 18 ரன்னிலும், ஒல்லி போப் 44 ரன்னிலும், ஹாரி புரூக் 11 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஜோ ரூட் 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் நிதிஷ் குமார் ரெட்டி 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து கைவசம் 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.