5th Test Day 2: மீண்டும் சொதப்பிய டாப் ஆர்டர், பந்த் அதிரடி அரைசதம்; தோல்வியைத் தவிர்குமா இந்தியா?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே சேர்த்தது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள நான்கு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் ஒரு போட்டியிலும் டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இதையடுத்து ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரிஷப் பந்த் 40 ரன்களையும், , ரவீந்திர ஜடேஜா 26, ஜஸ்பிரித் பும்ரா 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்காட் போலனட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Trending
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் லபுஷாக்னே 2 ரன்னிலும், சாம் கொன்ஸ்டாஸ் 23 ரன்னிலும் டிராவிஸ் ஹெட் 4 ரன்னிலும் என நடையைக் கட்டினர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் - பியூ வெப்ஸ்டர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மிட்டனர்.இதில் ஸ்மித் 33 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த அலெக்ஸ் கேரியும் 20 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பியூ வெப்ஸ்டர் தனது அறிமுக போட்டியில் அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் இணைந்த கேப்டன் பாட் கம்மின்ஸும் ரன்களை சேர்த்து வந்த நிலையில் 10 ரன்கள் எடுத்த் கையோடு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் ஸ்டார்க்கும் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் நிதிஷ் ரெட்டி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் அரைசதம் கடந்து விளையாடி வந்த பியூ வெப்ஸ்டர் 57 ரன்களைச் சேர்த்த நிலையில், அடுத்து வந்த ஸ்காட் போலண்ட் 9 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 51 ஓவர்களை மட்டுமே விளையாடி 181 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், நிதிஷ் ரெட்டி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 4 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து நான்கு பவுண்டரிகளை விளாசி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார்.
அதேசமயம் மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த கேஎல் ராகுல் 13 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், அவரைத் தொடர்ந்து 22 ரன்களை எடுத்திருந்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் என அடுத்தடுத்து ஸ்காட் போலண்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய விராட் கோலி மீண்டும் ஒருமுறை அவுட்சைட் ஆஃப் திசையில் ஸ்லிப்பிடம் தனது கேட்சை கொடுத்து பெவிலியன் திரும்ப அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து இன்னிங்ஸைத் தொடங்கினார். ஆனால் ஷுப்மன் கில் மீண்டும் ஒருமுறை மோசமான ஷாட்டை விளையாடி ஆட்டமிழந்தார்.
ஆனால் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்து அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டதுடன் 29 பந்துகளில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் இந்திய அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்த நிலையில், ரிஷப் பந்து 33 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 61 ரன்களை எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஆல் ரவுண்டர் நிதிஷ் ரெட்டியும் 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் மோசமான ஷாட்டை விளையாடி தனது விக்கெட்டை தாரை வார்த்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணை மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டனர். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்களைச் சேர்த்தது. இதில் ரவீந்திர ஜடேஜா 8 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 145 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now