
இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது.
இப்போட்டியில் மழைக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைச் சேர்க்க, அடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 260 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டானது. பின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 87 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்ததுடன், இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்காகவும் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 8 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.
இறுதியில் தொடர் மழை காரணமாக இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதனால் இரு அணிகளும் இத்தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனிலையில் நீடித்து வருகின்றனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் டிசம்பர் 26அம் தேதில் மெல்போர்னில் நடைபெறவுள்ளது.