
இங்கிலாந்து மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை இங்கிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரிலும் 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றி அசத்தியது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் சோஃபி டிவைன் சதமடித்து அசத்தியதுடன் அணிக்கு ஆறுதல் வெற்றியையும் பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 10 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தை பிடித்துள்ளார் சோஃபி டிவைன்.
அதேசமயம் இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து மகளிர் அணி வீராங்கனை எமி ஜோன்ஸும் 5 இடங்கள் முன்னேறி 12ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். இப்பட்டியலின் முதலிடத்தில் இங்கிலாந்து நாட் ஸ்கைவர் பிரண்ட் நீடித்து வருகிறார். மேலும் இப்பட்டியலில் இந்திய அணியைச் சேர்ந்த வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா நான்காம் இடத்திலும், ஹர்மன்ப்ரீத் கவுர் 9ஆம் இடத்திலும் நீடித்துள்ளனர்.