
இந்தியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 45 போட்டிகள் கொண்ட லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 6 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து கிட்டத்தட்ட அரையிறுதிசுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த மிகப்பெரிய சவால் நிறைந்த போட்டியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இத்தொடரில் தென் ஆப்பிரிக்க அணியும் நெதர்லாந்துக்கு எதிராக சந்தித்த தோல்வியைத் தவிர்த்து எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் வென்று மிரட்டலாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இங்கிலாந்து போன்ற அணிகளை அடித்து நொறுக்கிய தென் ஆப்பிரிக்கா அசால்டாக 400 ரன்களை குவித்து எதிரணி பவுலர்களை பந்தாடி வருகிறது.
இந்நிலையில் ஐடன் மார்க்ரம், ஹென்றிச் கிளாசென், டேவிட் மில்லர் போன்ற அதிரடியாக விளையாடும் வீரர்களால் மற்ற அணிகளை காட்டிலும் இந்த உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவிடம் சரவெடியாக அடித்து நொறுக்கும் மிடில் ஆர்டர் இருப்பதாக முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார். அதனால் 2011 உலகக் கோப்பையை வென்ற இந்தியாவை நாக்பூரில் தோற்கடித்தது போல் இம்முறையும் தென் ஆப்பிரிக்கா வென்றால் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.