
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணியானது 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்று அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று வொர்செஸ்டரில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீராங்கனைகள் சூஸீ பேட்ஸ் - பிலிம்மெர் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த அமெலியா கெர் மற்றும் கேப்டன் சோஃபி டிவைன் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சோஃபி டிவைன் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேடி க்ரீனும் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவர்களைத்தொடர்ந்து மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அமெலியா கெர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 43 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் ஜெஸ் கெர் 14 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் நியூசிலாந்து அணியானது 41.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சோஃபி எக்லெஸ்டோன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.