
நடப்பு உலகக் கோப்பை தொடரில் நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து மிகவும் அபாயகரமான அணியாக எல்லோராலும் பார்க்கப்பட்டது. அதற்கேற்ற வகையில் தான் அந்த அணியின் செயல்பாடுகளும் கடந்த சில வருடங்களாக கிரிக்கெட்டில் இருந்து வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் என அவர்களை இந்த வடிவத்தில் கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கிறது. நிறைய ஆல்ரவுண்டர்கள் மேலும் நீளமான பேட்டிங் லைன் அப் என்று அவர்கள் உலகில் எல்லோரையும் விளையாடுவதற்கு முன்பாகவே அச்சுறுத்தக் கூடியவர்களாக இருந்து வருகிறார்கள்.
இப்படியான இங்கிலாந்து அணிக்கு இந்த உலகக் கோப்பை தொடர் சிறப்பாக ஆரம்பிக்கவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில், நியூசிலாந்து அணி இடம் ஒட்டுமொத்தமாக எல்லா துறைகளிலும் தோற்று இங்கிலாந்து சரணடைந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து கிரிக்கெட் உலகம் மீளாத நேரத்தில், இதைவிட மிக மோசமாக விளையாடி ஆஃப்கானிஸ்தான் அணியிடம் அதுவும் சிறிய மைதானத்தில் தோற்றது.
இதுவரை நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் சிறிய அணிக்கு எதிராக மிக மோசமான தோல்வியாக இது பதிவாகி இருக்கிறது. இந்த நிலையில் நாளை மறுநாள் மும்பை வான்கடே மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இங்கிலாந்து விளையாட இருக்கிறது. நெதர்லாந்து அணியிடம் தோற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கும் இது மிகவும் முக்கியமான ஒரு போட்டியாக அமைந்திருக்கிறது.