
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இங்கிலாந்து மோசமாக ஆட்டதால் கோப்பையை தக்க வைக்க முடியாமல் முதல் அணியாக வெளியேறியது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக விளையாடப் போகும் தொடர்களில் வரும் 2024 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடர் இங்கிலாந்துக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஜோ ரூட் தலைமையில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிராண்டன் மெக்கல்லம் ஆகியோர் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடியான ஆட்டத்தை பின்பற்றி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அந்த அணுகு முறையை பின்பற்றி தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் போன்ற அணிகளை அடித்த நொறுக்கிய அந்த அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரையும் சமன் செய்தது.
எனவே அதே அணுகுமுறையுடன் இந்தியாவையும் அதனுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து தோற்கடிக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஆனால் 2012ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தோற்ற இந்தியா அதன் பின் கடந்த 11 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோல்வியில் சந்திக்காமல் வீர நடை போட்டு வருகிறது.