
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நேற்று ட்ரினிடாட் நகரில் நடைபெற்று முடிந்தது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி த்ரில் வெற்றியை பெற்றது. அதோடு 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரிலும் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனான ஷிகார் தவான் 97 ரன்கள் அடித்து அசத்தியதன் மூலம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை இதே குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளதால் தற்போது இரு அணி வீரர்களும் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.