
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்று நடப்பு சாம்பியனாக 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் உலககோப்பை தொடரில் இங்கிலாந்து அணி அடியெடுத்து வைத்தது. இம்முறையும் ஜோஸ் பட்லர் தலைமையில் அதிரடி வீரர்கள் அணியில் நிறைந்திருப்பதால் இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது வரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி ஒரு வெற்றியை மட்டுமே பெற்று இரண்டு புள்ளிகளுடன் புள்ளி பட்டியல் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பலம் வாய்ந்த நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக மட்டுமின்றி ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்தது அந்த அணியின் மிக மோசமான நிலையை காட்டுகிறது.
இங்கிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள நட்சத்திர வீரர்கள் பலர் பார்மில் இல்லாத காரணத்தினால் அந்த அணி தடுமாறி வருகிறது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு முன்னணி நட்சத்திர வீரர் இங்கிலாந்து அணியிலிருந்து வெளியே உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அக்டோபர் 21ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியிலேயே மைதானத்திலிருந்து வெளியேறினார்.