அறுவை சிகிச்சைகாக நியூசிலாந்து புறப்படும் பும்ரா!
காயம் காரணமாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்துவரும் ஜஸ்ப்ரித் பும்ரா அறுவைசிகிச்சை மேற்கொள்வதற்காக நியூசிலாந்து செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை நியூசிலாந்துக்கு அனுப்பும் ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது பிசிசிஐ. இதற்கான காரணத்தை கேட்டு தான் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். ஒருநாள் கிரிக்கெட், டி20 கிரிக்கெட், டெஸ்ட் என 3 வடிவங்களிலும் இந்திய அணி நம்பர் 1 ஆக திகழ்ந்து வருகிறது. ஆனால் இந்தியாவின் தூணாக பார்க்கப்படும் ஜஸ்பிரித் பும்ரா எப்போது இந்த பலமான அணியுடன் இணைவார் என்பது தான் பெரும் கேள்வியாக உள்ளது.
கடந்தாண்டு இங்கிலாந்து தொடரின் போது முதுகு வலி பிரச்சினை காரணமாக வெளியேறிய ஜஸ்பிரித் பும்ரா, இன்னும் முழுமையாக குணமடைந்து இந்திய அணிக்கு திரும்பாமல் உள்ளார். பும்ரா பயிற்சியை தொடங்கிவிட்டார், விரைவில் அணிக்கு வந்துவிடுவார் எனக்கூறிவிட்டு கடைசி நேரத்தில் இன்னும் ஓய்வு தேவை என அனுப்பிவிடுகின்றனர். இதனால் ஆசிய கோப்பை, டி20 உலகக்கோப்பை என பல முக்கியமான தொடர்களில் பும்ரா விளையாட முடியாமல் போனது. ஆஸ்திரேலியாவுடனான தொடரில் வந்துவிடுவார் என எதிர்பார்த்த சூழலில் அதில் இருந்தும் விலகினார்.
Trending
இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ராவை நியூசிலாந்துக்கு அனுப்ப பிசிசிஐ ஏற்பாடு செய்து வருகிறது. பும்ராவுக்கு ஏற்பட்டு பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை செய்தே தீர வேண்டுமாம். ஆனால் குணமடைய நாட்கள் எடுத்துக்கொள்ளும் என பும்ரா அதனை தவிர்த்து வந்துள்ளார். எனினும் தற்போது வேறு வழியே இல்லை என்ற வகையில் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
நியூசிலாந்தை சேர்ந்த ரோவன் ஸ்கௌடன் என்ற மருத்துவர் தான் இதனை செய்யவுள்ளார். இவர் ஏற்கனவே ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷேன் பாண்ட், ஜேம்ஸ் பாட்டின்சன் போன்ற பல முன்னணி பந்துவீச்சாளர்களுக்கும் இவர் தான் அறுவை சிகிச்சை செய்து கம்பேக் தரவைத்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்களின் அறிவுறுத்தலின் படி இந்த மருத்துவரை தேர்வு செய்துள்ளார் பும்ரா.
அறுவை சிகிச்சை முடிந்தவுடன் பும்ரா குணமடைந்து பழையபடி செயல்படுவதற்கு 24 - 25 வாரங்கள் வரை ஆகும் எனக்கூறப்பட்டுள்ளது. அதாவது செப்டம்பர் மாதம் வரை பும்ராவால் விளையாட முடியாது. இதன் மூலம் ஐபிஎல் தொடர் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடமாட்டார் என உறுதியாகியுள்ளது. இனி நேராக உலகக்கோப்பையில் தான் அவரை பார்க்க முடியும்.
Win Big, Make Your Cricket Tales Now