
இங்கிலாந்து கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் ஈயன் மோர்கனும் ஒருவர். கடந்த 7 ஆண்டுகளாக இங்கிலாந்து அணியின் வெற்றிகளுக்கு பின் இருக்கும் காரணம் இவர் தான்.
கடந்த 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது, அலெஸ்டர் குக்கிடம் இருந்து மோர்கனுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் இங்கிலாந்துக்கு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் பல வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார். அதிலும் கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இவரின் தலைமையில் தான் இங்கிலாந்து அணி பெற்றிருந்தது.
இந்நிலையில் 35 வயதே ஆகும் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக மோர்கன் காயம் மற்றும் ஃபார்ம் அவுட் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். ஐபிஎல் தொடரில் ஏலம் போகாத அவர், இங்கிலாந்து அணியில் இருந்தும் புறக்கணிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.