
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 25ஆம் தேதி பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது வரும் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்காக ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இத்தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் திடீரென பணிச்சுமை காரணமாக ஓய்வளிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
அவருக்கு பதிலாக அறிமுக வீரர்கள் பிரெசர் மெக்கர்க், ஸேவியர் பார்ட்லெட் ஆகியோர் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிளென் மேக்ஸ்வெல் மது அருந்தியிருந்ததால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக தான் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.