
இந்திய அணியின் இளம் வீரரான இஷான் கிஷன் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி இதுவரை இந்திய அணிக்காக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் அதிரடியான தொடக்க வீரராக பார்க்கப்படும் இஷான் கிஷன் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இந்திய அணியில் இடம்பிடித்து வருகிறார்.
ஆனாலும் இந்திய டி20 அணியில் முதன்மை துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் இருப்பதனால் இவரது துவக்க வீரருக்கான இடத்தில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. எனவே அவ்வப்போது இஷான் கிஷன் மிடில் ஆர்டரிலும் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாலும், ராகுலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாலும் தற்போது துவக்க வீரராக விளையாடி வரும் இஷான் கிஷன் மிகச் சிறப்பான ஆட்டத்தை முதல் போட்டியில் வெளிப்படுத்தியுள்ளார். நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் 48 பந்துகளில் 11 பவுண்டரி 3 சிக்ஸர் என 76 ரன்கள் எடுத்து அசத்தினார்.