
நடப்பு ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தங்களுடைய முதல் 8 லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து செமி ஃபைனல் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று எதிரணிகளை தெறிக்க விட்டு வருகிறது.
சொல்லப்போனால் இந்த வெற்றிகளில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற பேட்ஸ்மேன்களுக்கு நிகராக பும்ரா, சிராஜ், ஷமி, ஜடேஜா, குல்தீப் ஆகிய பவுலர்கள் மிகவும் முக்கிய பங்காற்றி வருகிறார்கள் என்றே சொல்லலாம். ஏனெனில் முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவை 199 ரன்களுக்கு சுருட்டி வெற்றி பெறுவதற்கு பங்காற்றிய அவர்கள் நியூசிலாந்துக்கு எதிராகவும் 400 ரன்களை தொடவிடாமல் வெற்றி பெற வைத்தனர்.
குறிப்பாக ஷமி, சிராஜ், பும்ரா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்துகளில் எதிரணிகளை தெறிக்க விட்டு வருகிறார்கள். இதனால் இந்தியாவின் பவுலிங் இரக்கமற்றதாக மாறியுள்ளதாக சோயப் அக்தர் பாராட்டிய நிலையில் பாகிஸ்தானை விட இந்திய பவுலிங் உலகத்தரம் வாய்ந்ததாக இருப்பதாக வாசிம் அக்ரம் தெரிவித்திருந்தார்.