பல சாம்பியன் பட்டங்களை வெல்ல வேண்டும் என்பதுதான் எனது பணி - ரோஹித் சர்மா பதிலடி!
இந்திய அணிக்காக பல சாம்பியன் பட்டங்களை வெல்ல வேண்டும் என்பதுதான் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் பணி என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2ஆவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் நாளை தொடங்குகிறது. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இதையொட்டி ஒரு வாரத்திற்கு மேலாக இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பட்டம் வென்று வரலாறு படைக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ஏனெனில் கடந்த 2013ஆம் ஆண்டிற்கு பிறகு எந்தவொரு ஐசிசி தொடர்களிலும் சாம்பியன் பட்டத்தை வெல்லமுடியாமல் திணறி வருகிறது. அதிலும் குறிப்பாக ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை என முக்கிய தொடர்களில் அரையிறுதிச் சுற்றுவரை முன்னேறிய நிலையிலும் இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.
Trending
அதேபோல் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவி கோப்பையை இழந்தது. இதனால் இம்முறை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடவுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, “நான் மட்டுமல்ல எனக்கு முன்பு இருந்தவர்களும் சரி கேப்டனாக பொறுப்பேற்று இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி சென்று பல போட்டிகளையும் பல சாம்பியன் பட்டங்களையும் வெல்ல வேண்டும் என்பது எங்களுக்கு வழங்கப்பட்ட பணியாகும்.
எனக்கும் அதே போல் தான் நானும் நிறைய போட்டிகளை வெல்ல வேண்டும். நிறைய சாம்பியன் பட்டங்களை வெல்ல வேண்டும் என்பதற்காக தான் இந்த போட்டிகளில் நாங்கள் விளையாடுகிறோம். கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காக எங்களை நாங்களே நெருக்கடி ஏற்படுத்திக் கொண்டு பலவற்றைக் குறித்து யோசித்து கொண்டு இருக்க மாட்டோம்.
கேப்டனாக நான் விலகும் போது ஒன்று அல்லது இரண்டு கோப்பைகளை வென்றெடுக்க வேண்டும் என நினைக்கிறேன். கடந்த ஐசிசி தொடர்களில் என்ன நடந்தது என்பது குறித்து நாங்கள் யோசித்துக் கொண்டிருக்க மாட்டோம். அதே சமயம் அதைப்பற்றி யாரும் எங்களுக்கு நினைவு படுத்தத் தேவையில்லை.ஆடுகளமும் கால சூழலும் மாறிக்கொண்டே இருக்கும். இதனால் அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் தயாராக இருக்க வேண்டும்.
கிரிக்கெட் வல்லுனர்கள் பலவற்றை குறித்து பேசலாம். ஆனால் எந்த அணி ஐந்து நாட்களிலும் சூழலுக்கு ஏற்ற வகையில் தங்களை மாற்றிக் கொண்டு விளையாடுகிறார்களோ. அவர்களே வெற்றி பெறுவார்கள். தொடக்க வீரராக சுப்மன் கில் களமிறங்குகிறார். அவருக்கு எந்த அறிவுரையும் சொல்ல தேவை இல்லை என்று நினைக்கிறேன். அவர் பேட்டிங் செய்ய விரும்புவார்.
ஐபிஎல் தொடரில் அவர் பெரிய சதங்களை எல்லாம் அடித்திருக்கிறார். நாளைய ஆட்டத்திலும் அவர் ஆடுகளத்தில் அதிக நேரம் செலவழித்து ரன்கள் சேர்ப்பார் என்பது எங்களுடைய நம்பிக்கை. அவர் நிச்சயம் நம்பிக்கை மிகுந்த வீரராக தான் திகழ்கிறார். யார் நாளை விளையாடுகிறார்கள் என்பது குறித்து இன்று சொல்ல மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now