
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளின் முடிவில் இந்தியா 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா 1 போட்டியிலும் வென்று தொடரை வெல்வதற்கு கடுமையான போட்டி போட்டு வருகின்றன. முன்னதாக 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக உலகக்கோப்பையை வென்று அசத்தியது.
அதிலும் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்றும் இறுதிப்போட்டியில் துரதிஷ்டவசமாக தோல்வியை சந்தித்ததால் இந்திய வீரர்கள் கண்கலங்கி நின்றார்கள். அந்த சோகத்திலிருந்து வெளிவருவதற்குள் அடுத்த இரண்டு நாட்களில் இப்படி ஒரு தொடரை பிசிசிஐ நடத்துவது ரசிகர்களை கோபமடைய வைத்தது. மறுபுறம் 6ஆவது முறையாக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியினர் அதை முழுமையாக கொண்டாடி முடிப்பதற்கு முன்பாக இத்தொடரில் களமிறங்கினர்.
மேலும் உலகக் கோப்பையில் விளையாடி முடித்த அழுத்தத்திலிருந்து முழுமையாக வெளிவந்து புத்துணர்ச்சியை பெறுவதற்கு முன்பாக இத்தொடரில் ஆஸ்திரேலிய அணியினர் விளையாடுவதும் அந்நாட்டு ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பை நடைபெற்று முடிந்ததும் நடைபெறும் இத்தொடர் யாரிடமும் ஆர்வமின்றி மலிவான தொடராக இருப்பதாக மைக் ஹஸி விமர்சித்துள்ளார்.