
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்துள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன.
அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணியை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி இந்த அணியின் கேப்டனாக டெம்பா பவுமா தொடரும் நிலையில், காயத்தால் சமீப காலங்களில் விளையாடாமல் இருந்த ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, லுங்கி இங்கிடி ஆகியோரும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இதில் ஆன்ரிச் நோர்ட்ஜே மீண்டும் காயமடைந்து இத்தொடரில் இருந்து விலகினார்.
மேற்கொண்டு நோர்ட்ஜேவுக்கு பதில் தேர்வு செய்யபட இருந்த ஜெரால்ட் கோட்ஸி பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியில் தேர்வு செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, பயிற்சியில் காயமடைந்து அத்தொடரில் இருந்து விலகினார். மேற்கொண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தேர்வில் இருந்தும் ஜெரால்ட் கோட்ஸி விலகியதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.